

சிவகங்கை அருகே கிராம எல்லையில் ‘எங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என மக்கள் அறிவிப்புப் பலகை வைத்தனர்.
தமிழகத்தில் தேர்தல்களின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. வாக்குகளை விற்காதீர்கள் எனத் தேர்தல் அதிகாரிகள் பிரச்சாரம் செய்தாலும், வாக்காளர்கள் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், பெரியக்கோட்டை ஊராட்சி தெக்கூரில் `எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல' என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதை அக்கிராமத்தைச் சேர்ந்த வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றத்தினரும், மகளிர் மன்றத்தினரும் இணைந்து வைத்துள்ளனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், நேருயுவ கேந்திரா அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அக்கிராமமக்களை பாராட்டினர்.
வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி க.வாசு தேவன் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 500 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களிடம் வாக்குகளை விற்க வேண்டாம். அது நாட்டுக்கும், நமக்கும் அவமானம் எனப் புரிய வைத்தோம். பெண்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் அரசியல் கட்சியினர் பணத்தோடு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஊர் எல்லை யிலேயே அறிவிப்புப் பலகை வைத்துள்ளோம். அடிப்படை பிரச்சினை களைத் தீர்ப்பதாக இருந்தால் மட்டும் வாக்கு கேட்டு வரலாம், என்று கூறினார்.