

அதிமுகவுடன் சமாதானம் பேசுமாறு சசிகலா தன்னிடம் கேட்டுக்கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும் நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் என்னையும் என் மனைவியையும் பார்க்க விரும்பினார். அவரின் அழைப்பிலேயே நான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் தனிப்பட்ட விசாரணைகளைத் தாண்டி நாங்கள் அரசியலும் பேசினோம்.
வரும் தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதிமுகவுடன் நான் சமாதானம் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
அதேவேளையில் அவர் நானும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அழுத்தவில்லை. ஏனெனில், நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று அவருக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை விடுத்திருந்த சசிகலா, ”தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
அவர் ஒற்றுமை எனக் குறிப்பிட்டது அதிமுகவுடனான சமரச முயற்சியே என்று கூறப்பட்ட நிலையில், சீமான் இன்றைய பேட்டியில் சசிகலா அதிமுகவுடன் சமாதானத்தை விரும்பியதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.