

வரும் சட்டப்பேரவை தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று (மார்ச் 6) முதல் வரும் 8ம் தேதிவரை விருப்பமனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், இன்று முதல் வரும் 8ம் தேதிவரை விசிகவில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை வழங்கலாம் என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விருப்பமனுக்கள் கட்சித் தலைமையகம் அம்பேத்கர் திடலில் பெறப்படும்.
06-03-2021 முதல் 08-03-2021 வரை விருப்பமனுக்களை வழங்கலாம். தோழர்கள் பெருங்கூட்டத்தோடு வந்து விருப்பமனு அளிப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும். தேர்தல் பணிக்குழுவின் மாநில செயலாளர் ஜெ.குணவழகன், தலைமை நிலைய செயலாளர்கள் மு.தனக்கோடி, வழக்கறிஞர் இரா.தமிழினியன் மற்றும் இணை செய்தித் தொடர்பாளர் இரா.விக்கிரமன் ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெறுகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு கட்டணமாக ரூ.2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.