

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரை இளைஞர் ஒருவர் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய ஆடையை அணிந்து பிரச்சாரம் செய்துவருகிறார்.
தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு இலக்கு எட்டுவதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வருகிறது.
ஆனாலும், வாக்குப்பதிவு எதிர்பார்த்த இலக்கை எட்டுவதில்லை. அதனால், மதுரையில் தனி நபராக 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஆடைகளையும், வாசகங்களையும் தாங்கிய இளைஞர் அசோக்குமார் மதுரை சாலைகளில் பிரச்சாரம் செய்தார்.
தன்னுடைய சொந்த வேலைகளை விட்டுவிட்டு, சமூக மாற்றத்திற்கான தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வலிறுத்தி அவர் மேற்கொண்ட இந்த சுயநலமற்ற சமூக சேவை பார்ப்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
அவரை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டிச் சென்றதோடு கண்டிப்பாக இந்தத் தேர்தலில் வாக்களிப்போம் என்று உறுதிப்பட தெரிவித்துச் சென்றனர்.
இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், ‘‘முதியோர்கள், இளைய தலைமுறை வாக்காளர்கள், பொதுமக்கள் என வாக்காளர்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் 100 சதவீதம் வாக்களிப்போம் என விழிப்புணர்வு செய்து வருகிறேன்.
ஒவ்வொரு தேர்தல்களிலும் இதை நான் ஏதாவது ஒரு வகையில் பிரச்சாரமாக செய்து வந்தள்ளேன். இந்த ஆண்டு புதிய முயற்சியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஆடை மற்றும் பதாகை மூலம் வழியுறுத்திட விழிப்புணர்வு செய்கிறேன்’’ என்றார்.