

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பாளையங்கோட்டையில் துணை ராணுவப் படையினர் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்துக்குத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையினர் கடந்த 28-ம் தேதி வந்தனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணனை, எல்லை பாதுகாப்புப் படை கமாண்டர் நிரச் மனோகர், உதவி கமாண்டர் தளவாய் நரேந்தர்சிங் ஆகியோர் சந்தித்து தேர்தல் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாநகரில் முகாமிட்டுள்ள துணை ராணுவப் படையினர் மேலப்பாளையத்தில் இன்று மாலையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். முன்னதாக பாளையங்கோட்டை சமாதானபுரத்திலும், கேடிசி நகரிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை உள்ளூர் போலீஸாருடன் இணைந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.