தனுஷ்கோடி கடலோரத்தில் 9,897 ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறை நடவடிக்கை: முதற்கட்டமாக 131 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

தனுஷ்கோடி கடலோரத்தில் 9,897 ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறை நடவடிக்கை: முதற்கட்டமாக 131 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான், அழகன்குளம், ஆற்றங்கரை, புதுவலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது கடல் ஆமை பிடிபடும் சூழ்நிலையில் ஆமைகளை எவ்வித பாதிப்புமின்றி கடலில் மீள விடுவித்திட ஏதுவாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கடல் ஆமை முட்டையிடும் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 11 அன்றிலிருந்து இன்று மார்ச் 05 (வெள்ளிக்கிழமை) வரையிலும் தனுஷ்கோடி கடற்பகுதியிலிருந்து 84 குழிகளிலிருந்து 9,897 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த முட்டைகள், நாய் மற்றும் பறவைகளால் சேதமடைவதைத் தடுக்கும் விதமாக அவற்றை சேகரித்து வனத்துறையினர் மீனவர்களின் உதவியுடன் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொறிப்பகங்களில் அடைகாத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில் ஆமை முட்டை பொறிப்பகங்களில் முட்டைகளிலிருந்து வெளிவந்த 131 ஆமை குஞ்சுகளை, ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின பாதுகாப்பாளர் மாரிமுத்து தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மலர்தூவி இன்று பாதுகாப்பாக கடலில் விட்டனர். இதனை தனுஷ்கோடி வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in