

ஐக்கிய அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,721 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அமீரகத்தில் 2,721 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,96,771 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 11 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.