

பாஜக தன்னை 24 மணி நேரமும் விமர்சிப்பதற்கான காரணம் தனது நேர்மையே என ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தூத்துக்குடியில், வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியபோது, "தங்களை விமர்சிப்பவர்களை, கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்தும் கைது செய்யும் பாஜக என்னை மட்டும் நெருங்கவதில்லை. நான் அதிர்ஷ்டக்காரன். ஏனென்றால், எனது அரசியல் வாழ்க்கையில் நான் மிகுந்த நேர்மையுடன் இருக்கிறேன். என் மீது எவ்வித ஊழல் புகாரும் இல்லை. அதனால், என் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு என எதையும் ஏவிவிட முடியாது. அதன் காரணமாகவே பாஜக என்னை 24 மணி நேரமும் விமர்சிக்கிறது" என்றார்.