

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ சிரிய எல்லை பகுதியில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் பலியாகினர். அமெரிக்காவின் தாக்குதலை எங்கள் முன்கூட்டியே அறிவித்ததா என்று எங்களால் கூற முடியாது. நாங்கள் தொடர்ந்து சிரியாவில் நிலைமையை கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று அமெரிக்க ராணுவம் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளின் பல நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. வாகனங்களும் தாக்கப்பட்டன. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அவர் விடுத்த முதல் தாக்குதல் உத்தரவு இதுவாகும்.
சிரியாவில் போர் குற்ற விதிமீறல்கள் நடந்து வருவதாக ரஷ்ய போர் கண்காணிப்பு குழு குற்றம் சுமத்தியது. இந்த நிலையில் அமெரிக்கா சிரியாவில் இத்தகைய தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.