சிலிண்டர் விலை ரூ.810: ஒரே மாதத்தில் 3-வது முறையாக உயர்வு

சிலிண்டர் விலை ரூ.810: ஒரே மாதத்தில் 3-வது முறையாக உயர்வு
Updated on
1 min read

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை உயர்த்தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.25 விலை உயர்த்தப்பட்டு சிலிண்டரின் விலை ரூ.810 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில் சிலிண்டர் விலை உயர்வு அவர்களுக்குக் கூடுதல் சுமையாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி சிலிண்டர் விலை மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் அதனை நிர்ணயிக்கின்றன. அதன்படி, இம்மாதம் (பிப்ரவரி ) 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின் பிப்ரவரி 15-ல் மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.785க்கு விற்பனையானது.

இதனையடுத்து, இன்று சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டரின் விலை தற்போது ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டருக்கான மானியத்தொகை நேரடியாகப் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in