

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 8-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசித்திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார்.
பச்சை சார்த்தி உலா
அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்திய கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சார்த்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் மேற்பார்வையில், தாலுகா காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாளை தேரோட்டம்
10-ம் திருநாளான நாளை (25-ம் தேதி) காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தேரரோட்டத்தில் பெரிய தேரில் சுவாமி எழுந்தருளி 4 வெளி வீதிகளிலும் பவனி வருவார். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு பெரிய தேர் இரண்டும் ஓடவில்லை. அதனால் விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன், தெய்வானை அம்மன் தனித்தனி 3 சிறிய தேர்களில் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான 27-ம் தேதி இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.