

மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீஸார், கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் அக்கட்சியின் மாவட்ட தலைவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மத்திய பாஜக அரசின் 3 வேளாண் கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டபொம்மன் சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக அக்கட்சியின் மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமையில் அக்கட்சியினர் அங்கிருந்து ஊர்வலமாக இந்திரா காந்தி சிலையை நோக்கி செல்ல முயன்றனர்.
இதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கார்த்திகேயனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு, காமராஜ் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 60க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.