பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் குளறுபடி: சிவகங்கையில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
Updated on
1 min read

சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)சர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. வறட்சி, வெள்ளம் பாதிப்பு போன்றவற்றால் 2016-ம் ஆண்டில் இருந்து விவசாயிகள் பயிர்க்கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. அரசின் அறிவிப்பால் 2016-ம் ஆண்டில் இருந்து பெற்ற அனைத்து பயிர்க்கடன்களும் தள்ளுபடியாகும் என நினைத்தோம்.

ஆனால் கடந்த ஆண்டு வாங்கிய குறுகிய கால பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் வாங்கிய பயிர்க் கடன்களை மத்தியகால கடன்களாக மாற்றிவிட்டதால் அவற்றை தள்ளுபடி செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பயிர்க்கடன் பெயரில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, தற்போது தள்ளுபடி செய்ய முடியாது என கூறுகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வைகை அணையில் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு நீர் திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் மூடைகளுடன் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் மூட்டைக்கு ரூ.40 வாங்குகின்றனர். 40 கிலோ மூடைக்கு 2 கிலோ கூடுதலாக பெறுகின்றனர். கால்நடை துணை மருத்துவ நிலையங்களில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், என்று கூறினர்.

மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: அரசின் விதிமுறைகள்படி தான் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in