புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலேயே தங்கியுள்ள கிரண்பேடியால் சர்ச்சை

புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலேயே தங்கியுள்ள கிரண்பேடியால் சர்ச்சை
Updated on
1 min read

பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலேயே தங்கியுள்ள கிரண்பேடியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் தடுப்பு, துணைநிலை ஆளுநருக்கு ஐந்து அடுக்குப் பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டப் பணிகளில் சுணக்கம் என புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்ட சூழலில் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய துணைநிலைஆளுநராகத் தமிழிசை பொறுப்பு ஏற்றார்.

கிரண்பேடியால் 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி நகரப்பகுதி சாலைகளை மூடிப் போடப்பட்ட சாலைத்தடுப்புகள் அனைத்தும் புதிய ஆளுநர் தமிழிசை உத்தரவால் இன்று அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கிரண்பேடிக்குப் போடப்பட்ட ஐந்து அடுக்குப் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது.

40 நாட்களாகப் புதுச்சேரியில் இருந்து ஆளுநர் மாளிகை முன்பு ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் இருந்த துணை ராணுவத்தினரும் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டனர். அதே நேரத்தில் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு 3 நாட்களாகியும் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலேயே கிரண்பேடி தங்கியுள்ளார்.

இதுவரை பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலோ புதிய ஆளுநர் பொறுப்பு ஏற்பதற்கு முன்பாகவே பழைய ஆளுநர் புறப்பட்டுச் சென்றுவிடுவது மரபு. காவலர் மரியாதையை ஏற்று, புதிய ஆளுநர் பதவியேற்புக்குப் பிறகும் ஆளுநர் மாளிகையிலேயே கிரண்பேடி தங்கியுள்ளது பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in