

முதல்வர் பழனிசாமியின் நெல்லை பிரச்சாரத்தில் சிறுமி ஒருவர் அவருக்கு முருகன் சிலையைப் பரிசளித்தார். அதைப் புன்சிரிப்புடன் முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அந்த வகையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று (18.2.2021) திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீஜா என்னும் சிறுமி, முதல்வருக்கு முருகன் சிலையைப் பரிசளித்தார். அதைப் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட முதல்வர், சிலையை வணங்கிவிட்டுச் சிறுமியிடமே திருப்பிக் கொடுத்தார்.
உடனே சிறுமி, 'சிலை உங்களுக்குத்தான்' என்று கூறியதும், வாங்கி வைத்துக்கொண்ட முதல்வர், பின்னர் சிறுமியிடம் கை நிறைய சாக்லேட்டுகளை அள்ளிக் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
சாலையோரக் கடையில் டீ குடித்த முதல்வர்
இதற்கிடையே தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்துக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு செல்லும் வழியில் மகிழ்வண்ணநாதபுரத்தில் சாலையோரத்தில் உள்ள ஒரு கடையில் அமர்ந்து முதல்வர் பழனிசாமி டீ குடித்தார்.
அப்போது அமைச்சர்கள் வி.எம்.ராஜலெட்சுமி, ஆர்.பி..உதயகுமார், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தச்சை கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.