

10 ஆண்டுகளாக நிராகரித்ததைப் போல இந்தத் தேர்தலிலும் தமிழக மக்கள் குடும்ப ஆட்சியை நிராகரிப்பர் என்று மத்திய இணை அமைச்சரும் பாஜக தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அறிவுசார் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி பேசும்போது, ''பிஹார் மக்கள், தங்களின் மாநிலத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்தனர். உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியையும் மக்கள் நிராகரித்தனர்.
தமிழக மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப ஆட்சியை நிராகரித்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் அதைத் தொடர்ச்சியாகச் செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று கிஷன் ரெட்டி தெரிவித்தார்.