

கிருஷ்ணராயபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததை கண்டித்து, விவசாயிகள் டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் பகுதியில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது வழக்கம். நிகழாண்டு பிப். 18-ம் தேதியாகியும் இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.
இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 5,000 நெல் மூட்டைகள் இப்பகுதியில் தேங்கியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி விவசாயிகள், கிருஷ்ணராயபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து இப்பகுதி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி, கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம் சாலையில் கோவக்குளம் பகுதியில் நெல் கொட்டிய டிராக்டரை நிறுத்தி இன்று (பிப். 18) சாலை மறியல் செய்தனர்.
இது குறித்து, தகவலறிந்த மாயனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகள் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அவ்வழியே சென்ற பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவன ஊழியர் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் அவ்வழியாக செல்ல முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.