

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று வரும் தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் அன்பழகன் இல்லத் திருமண வரவேற்பு விழா நாமக்கல்லில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆட்சி என்ற பெயரில் நாட்டில் அட்டூழியங்கள் நடக்கின்றன. இவை அனைத்துக்கும் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.
சசிகலா தற்போது ஓய்வில் உள்ளார். ஓய்வு முடிந்ததும் அவர் வெளியே வந்து மக்களைச் சந்திப்பார். திமுக என்பது தீய சக்தி. அவர்கள்தான் எங்களுக்கு அரசியல் எதிரி. திமுகவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதற்காகத்தான் அமமுக தொடர்ந்து செயல்படுகிறது. அதிமுகவை மீட்டெடுக்கச் சட்டப் போராட்டம் நடத்தவே அமமுகவை ஆரம்பித்தோம். நாங்கள்தான் இந்தத் தேர்தலில் முதல் அணியாக இருப்போம்.
முதல்வர் பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று நான் சொல்வதை விடத் தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் பதில் சொல்வார்கள். நானோ, நீங்களோ (பத்திரிகையாளர்கள்) சொல்ல வேண்டியதில்லை'' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.