

சிவகங்கை , மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 9 பேரை சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 16 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர்.
திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தி மதுக்கடையில் சிலதினங்களுக்கு முன்பு, மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
தொடர்ந்து எஸ்.பி. ரோஹித்நாதன் உத்தரவில் எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் மதுபாட்டில்களை திருப்புவனம் அருகே கலியாந்தூரைச் சேர்ந்த ராஜதுரை (27), வேலு (32), பழையூரைச் சேர்ந்த வன்னிமுத்து (27), பாப்பான்குளத்தைச் சேர்ந்த வீரபத்திரன் (31), பிரகாஷ் (18), பிரபுதேவா (26), பாண்டி (20, முத்துக்கிருஷ்ணன்( 38), மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூஞ்சுத்தியைச் சேர்ந்த அரவிந்த்சாமி (26) ஆகிய 9 பேர் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி, எஸ்.வி.மங்கலம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். விரைந்து செயல்பட்டு திருடர்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை எஸ்பி ரோஹித்நாதன் பாராட்டினார்.