

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் நாளை (பிப்.17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருவாய்த்துறை பணிகளோடு புயல், வெள்ளம் நிவாரணம், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, சட்டப்பேரவைத் தேர்தல், நாடாஅளுமன்றத் தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, பட்டா வழங்குதல் உள்ளிட்ட இதர பணிகளையும் செய்கிறோம்.
ஆனால் எங்களது கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. ஏற்ககெனவே 3 கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
துறைசார்ந்த பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கருணை அடிப்படை நியமனங்களில் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும்.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு நிரந்தர துணை ஆட்சியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை 12 ஆயிரம் பேர் நாளை (பிப்.17) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர், என்று கூறினார்.