

சட்டப்பேரவைத் தேர்தலில் திருவல்லிக்கேணியில் போட்டியா, கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பாஜகவைச் சேர்ந்த குஷ்பு பேட்டி அளித்தார்.
சென்னை, திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதை நடிகை குஷ்பு சுந்தர், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறும்போது, ''திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட நான் இடம் கேட்கவில்லை. திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராக மட்டுமே நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.
234 தொகுதிகளிலும் நாங்கள் தேர்தல் பணியாற்றுவோம். பிரபலமான முகங்களுக்குப் பதிலாக அரசியல் வெற்றி வாய்ப்பு இருப்பவர்களுக்கே சீட் வழங்குவது பாஜகவின் வழக்கம். அந்த வகையில், வகுக்கப்பட்ட நெறிமுறைகளின் படியே சீட் வழங்கப்படும். பாஜக வேட்பாளர் குறித்து அறிவிக்க இன்னும் நேரம் இருக்கிறது.
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைத் தடுக்க மோடி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்று குஷ்பு தெரிவித்தார்.