

எங்களது மூத்த தலைவர் முல்லா ஹிபாதுல்லா குண்டுவெடிப்பில் பலியானதாக வெளியான தகவலை நாங்கள் மறுக்கிறோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்களின் மூத்த தலைவர் முல்லா ஹிபாதுல்லா பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக ஞாயிற்றுக்கிழமை தகவல் பரவியது. இந்த நிலையில் இதற்கு தலிபான்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபிமுல்லா முஜாஹித் தரப்பில், “நிதர்சனத்துக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத தகவல் இது. எதிரிகள் அழுத்தத்தில் உள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் வதந்திகளைப் பரப்புகின்றனர். எங்கள் தலைவர் முல்லா ஹிபாதுல்லா குண்டுவெடிப்பில் பலியாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்கா தலைமையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரகள் திரும்பப் பெறப்பட்டனர்.
இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டுவெடிப்புச் சம்பங்களில் தலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது.