

திமுக தேர்தல் பணிக்குழு துணைத் தலைவராக அறிவாலயத்தில் இருக்கிறார் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்த சுப.சிவப்பிரகாசம். இவரது பேரன் இலக்குவன் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளராக இருக்கிறார். இலக்குவனுக்கு ஜனவரி 27-ம் தேதி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திருமணம். ஜனவரி 30-ம் தேதி காரைக்குடியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கு வேட்டி - சட்டை, சேலை சகிதம் அழைப்பு விடுத்து அசரடித்தார் இலக்குவன். கடந்த முப்பது வருடங்களாக கூட்டணிக் கட்சிகளுக்கே காரைக்குடியை ஒதுக்கி வருகிறது திமுக. இந்த நிலையில், இம்முறை காரைக்குடியில் உதயசூரியன் உதிக்க வேண்டும் என திமுகவினர் ஒரே குரலாய் ஒலிக்கிறார்கள். திமுகவுக்கு காரைக்குடி ஒதுக்கப்பட்டால் போட்டியிட பலரும் பல வடங்களைப் பிடித்துக் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் புதுமாப்பிள்ளை இலக்குவனுக்கும் காரைக்குடியில் களமிறங்க ஆசையாம். அதற்கான முன்னோட்டம் தான் தனது திருமண வரவேற்பு நிகழ்வை காரைக்குடியில் பிரம்மாண்டப்படுத்தியதும், அதையொட்டி கழகத்தினர் மீது காட்டிய கரிசனமும் என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.