

ஈரானில் கரோனாவின் நான்காவது அலை நெருங்கியுள்ளதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி இன்று (சனிக்கிழமை) கூறும்போது, “ஈரானில் கரோனாவின் நான்காவது அலை நெருங்கியுள்ளது. இது அனைவருக்குமான எச்சரிக்கை ஆகும். நாம் இதனைத் தவிர்க்க வேண்டும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஈரானில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஈரானில் நான்காவது அலை பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் ராசி கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரானின் நூறு வருடப் பழமையான சீரம் பரிசோதனை மையம் இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகத் தன்னார்வலர்களுக்கு சீரம் கரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.