

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று (சனிக்கிழமை) காலை மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.
சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி கிருஷ்ணசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல் இன்று காலை பட்டாசு உற்பத்திக்கான வேலைகள் தொடங்கின.
அப்போது மருந்துக் கலவை அறையில் வைத்திருந்த வெடி மருந்துகள் திடீரென வெடித்துச் சிதறின. இதில் அந்தக் கட்டிடம் இடிந்து சேதம் அடைந்தது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பூ அணியைச் சேர்ந்த சுரேஷ் (31) என்பவர் பலத்த காயமடைந்தார்.
வெடி விபத்து ஏற்பட்டதும் அறையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தப்பியோடினர். தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்த சுரேஷ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மாறனேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.