Published : 11 Feb 2021 09:10 PM
Last Updated : 11 Feb 2021 09:10 PM

வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்கள்: ரூ.1 லட்சம் கொடுத்து விவசாயியைக் காப்பாற்றிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

மதுரை

மதுரை அருகே கடனால் வீட்டை ஜப்தி செய்ய வங்கி ஊழியர்கள் வந்தநிலையில், இக்கட்டான சூழலில் தவித்த விவசாயி குடுபத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர், தனது மகள் திருமணச் செலவு மற்றும் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்று அந்தக் கடனை முறையாக திரும்பி செலுத்தி வந்துள்ளார்.

ஆனால், கரோனாவால் கேரளாவில் பணியாற்றிய அவரது மகனுக்கு வேலை பறிபோனதால் போதிய வருவாயின்றி தவித்த விவசாயி செல்வராஜ் தனியார் வங்கியில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இதனால், தனியார் வங்கி நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்றம் உத்தரவின் பேரில் இன்று சொக்கம்பட்டியில் உள்ள செல்லவராஜின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்களுடன், வங்கிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.

விவசாயியான செல்வராஜின் வீட்டில் இருந்தவர்களை வெளியேறும்படி அவர்கள் கூறியதால் செய்வதரியாறு தவித்த செல்வராஜ் குடும்பத்தினர் வங்கிப் பணியாளர்களிடம் சிறிது கால அவகாசம் கேட்டு மற்றாடி உள்ளனர்.

பாக்கி பணம் செலுத்தாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க முடியாது என கூறியுள்ளனர்.

அப்போது கள்ளிக்குடி புதிய வட்டாச்சியர் அலுவலகத்திற்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்று அவ்வழியே சென்ற தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , கூட்டமாக இருப்பதை பார்த்து விசாரித்த போது விவரத்தைக் கூறி உள்ளனர்.

தகவல் அறிந்து காரைவிட்டு கீழே இறங்கிய அமைச்சர் விவசாயிக்கு பணம் செலுத்த அவகாசம் தரும்படி கேட்டபோது, அதற்கு அவர் குறிப்பிட்ட ஒரு தொகையாவது கொடுக்க வேண்டும் என வங்கிப் பணியாளர்கள் கூறியுள்ளனர் உடனே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான் கொண்டு வந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொடுத்து உதவியதுடன் , வங்கி ஊழியர்களிடம் பேசி கால அவகாசமும் பெற்றுக் கொடுத்துச் சென்றார்.

இதனால் கடனால் வீட்டைவிட்டு வெளியேற்றபட இருந்த விவசாயி செல்வராஜ் குடும்பத்தினர் அந்த இக்கட்டானநிலையில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

உரிய நேரத்தில் வந்து அமைச்சர் விவசாயி குடும்பபத்திற்கு உதவிய இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் செல்வராஜின் குடும்பத்தினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x