

பழநி கோயில் தங்கும் விடுதிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி முருகன் கோயிலுக்குச் சொந்தமாக தண்டபாணி நிலையம், கோசாலை மற்றும் இடும்பன் குடில் என்ற பெயர்களில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன.
பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகக் குறைந்த வாடகையில் தங்குவதற்கு, அனைத்து வசதிகளுடன் ஏராளமான அறைகள் பராமரிக்கப்பட்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள் பூட்டப்பட்டன. பத்து மாதங்களுக்கும் மேலாகப் பூட்டப்பட்டிருந்த விடுதி இன்று (பிப்.11) முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து இன்று காலை தண்டபாணி நிலையத்தில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு அறைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. இன்று முதல் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார் பாடி, உதவி ஆணையர் செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.