

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை பக்தர்கள் வீட்டிலிருந்தே பெறுவதற்கான திட்டத்தை, இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில் நிர்வாகம் பிப்ரவரி 15 முதல் தொடங்கவுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோயில்களில் பக்தர்களின் வருகை குறைவாகவே உள்ளது. பக்தர்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் இந்து அறநிலையத்துறை மற்றும் பழநி கோயில் நிர்வாகம், இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பழநி கோயிலின் பிரசித்திபெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தத்தை பக்தர்கள் வீட்டிலிருந்தே பெறும் திட்டத்தைத் தொடக்கியுள்ளது.
இதன்படி பழநி கோயில் பிரசாதத்தை பெறுவதற்கு
www.tnhrce.gov.in என்ற இணையளத்திலோ, அஞ்சல் நிலையங்களிலோ ரூ.250 செலுத்தி பதிவு செய்தால் அரைகிலோ பஞ்சாமிர்தம், சுவாமி ராஜா அலங்கார புகைப்படம் ஒன்று, விபூதி ஆகியவை அஞ்சல் துறை மூலம் வீ்ட்டிற்கு அனுப்பிவைக்கப்படும்.
இந்த திட்டம் வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே பதிவு செய்த அடுத்தநாளே பழநி கோயில் பிரசாதத்தை பெறமுடியும்.