

பழநி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து, சிரித்தபடியே சென்றார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்குத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகை தந்தார். இன்று அதிகாலை பழநி அடிவாரத்தில் மொட்டை அடித்து முடிக் காணிக்கை செலுத்திய வருவாய்த்துறை அமைச்சர் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு மேலே சென்று விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து படி வழியாகவே கீழே வந்த அமைச்சர் திருஆவினன்குடி கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அமைச்சரிடம் அதிமுக- தேமுதிக கூட்டணி குறித்தும், சசிகலா வருகை குறித்தும், அனைவரும் இணைந்து பொது எதிரியை வீழ்த்தவேண்டும் என்று சசிகலா தெரிவித்தது குறித்தும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்து சிரித்தபடியே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்றுவிட்டார். எப்போதும் ஆர்வமுடன் பேசும் அமைச்சர் உதயகுமார், பதில் பேசாமலேயே சிரித்தபடி சென்றது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.