

ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் டோஸ் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகம் தரப்பில், “இந்தியாவிலிருந்து சுமார் 5 லட்சம் டோஸ்கள் கரோனா தடுப்பு மருந்துகள் ( அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பு மருந்துகள்) ஆப்கானிஸ்தானிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிற்கு வந்து இறங்கிய முதல் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து இதுவாகும். எனினும் நாங்கள் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுகாக உலக சுகாதார அமைப்பின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
கரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.