

விருதுநகர் அருகே பித்தளைப் பானையை ஏமாற்றி இரிடியம் என மோசடி செய்து விற்க முயன்றதாக 11 பேரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் (35). தனது ஆட்டோவை விருதுநகரில் சிவகாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டிங் வேலைக்கு இன்று காலை விட்டுள்ளார். அப்போது, அவரது நண்பர் சம்பத் என்பவரும் உடன் சென்றுள்ளார்.
ஆட்டோவை வேலைக்கு விட்டுவிட்டு முத்துகுமாரும் அவரது நண்பர் சம்பத்தும் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அருகே நின்று டீக்குடித்த அடையாளம் தெரியாத 2 பேர் தங்களிடம் உள்ள பித்தளை பானையை இரிடியம் எனக்கூறி ஏற்கெனவே பேசி வைத்தது போல் காரில் வரும் நபர்களிடம் ஏமாற்றி விற்று கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு உடனே இங்கிருந்து சென்றுவிடலாம் எனப் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
பின்னர், சந்தேகப்படும்படியாக பேசிய இரு நபர்களும் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசாருக்கு ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஆமத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.