

திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாகத் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓட்டேரியில் திமுக சார்பில் இன்று (பிப்.6) பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, ’’தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். சொந்த புத்தியில் அல்ல, ஸ்டாலின் தந்த புத்தியை வைத்துத் திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் சுய அறிவுக்கு எதுவும் தோன்றவில்லை.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுத்தீர்களே? யார் சொன்னபிறகு கொடுத்தீர்கள்? நீங்களாகவே கொடுத்தீர்களா? ஸ்டாலின் 10 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டதால், 7.5 சதவீதம் கொடுத்தீர்கள்.
பொது மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னது யார்? பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தீர்கள். ஸ்டாலின் வைக்கிற கோரிக்கைகளைப் பார்த்துத்தான் உங்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
இதன்மூலம் இந்த ஆட்சியை வழிநடத்துவது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) அல்ல ஸ்டாலின்தான் என்பது தெரிய வருகிறது’’ என்று ஆ.ராசா தெரிவித்தார்.