

இலவச மின்சாரம் வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார். இதை அவர் இன்று மக்களவையில் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.
இதுகுறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி.யான டி.ரவிக்குமார் கேள்வி எழுப்பும்போது, ''அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளதா?
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் எவை? தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்படும் மின்சாரச் சலுகைகள் என்ன?'' எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய மின்சாரத் துறையின் இணை அமைச்சரான ஆர்.கே.சிங் அளித்து எழுத்துபூர்வ பதிலில், ''மின்சாரம் என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. இலவசமாகவோ சலுகை விலையிலோ வழங்குவது மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 65-ன் படி மாநில அரசுகளைச் சார்ந்தது.
கிராம மற்றும் நகரப் பகுதிகளில் மின்வசதி இல்லாத வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா திட்டம் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.