

பொள்ளாச்சி அருகே புலித்தோலை விற்க முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர், அழுக்குசாமியார் கோயில் அருகே அசோக் நகர் பகுதியில் புலித்தோலை சிலர் விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனப் பணியாளர்கள் அசோக் நகர் பகுதியில் நேற்று (பிப்.2) தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சந்தேகப்படும்படி 5 பேர் வந்துள்ளனர். அவர்களின் வாகனத்தைச் சோதனை செய்தபோது காரின் டிக்கியில் இருந்த பையில் பழைய புலித்தோல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சேத்துமடையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் வேட்டைக்காரன்புதூரில் உள்ள பிரசாத் கவுண்டர் என்பவரது வீட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்த புலித்தோலைத் திருடி தன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்.
தற்போது அந்த புலித்தோலை தன் இரு மகன்கள் உதயகுமார், ரமேஷ் குமார், அவர்களது கூட்டாளிகள் ஆனைமலையைச் சேர்ந்த பிரவீன், ஒடையகுளம் மணிகண்டன், சபரி சங்கர் ஆகியோர் மூலம் விற்பனை செய்வதற்குத் திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த புலித்தோல் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.