

நாகர்கோவிலில் பெண்கள் பணியாற்றி வந்த மென்பொருள் நிறுவனக் கழிப்பறையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பள்ளிவிளையைச் சேர்ந்தவர் சஞ்சு (29). இவர் சமீபத்தில் நாகர்கோவில் செட்டிகுளத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்குள்ள கழிப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அங்கு பணியாற்றிய பெண்கள் காரணம் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளிக்க முடியாமல் சஞ்சு திணறியுள்ளார். இதைத் தொடர்ந்து பெண் ஊழியர்கள் கோட்டார் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீஸார் மென்பொருள் நிறுவனக் கழிப்பறையில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமரா, லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சஞ்சுவைக் கைது செய்தனர்.
பெண்கள் பணியாற்றும் நிறுவனக் கழிப்பறைக்குள் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.