

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் சங்கத் தலைவர்கள் நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25-ம் தேதி வரை விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
டெல்லி எல்லையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
இந்நிலையில் காந்தியின் 74-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் சங்கத் தலைவர்கள் இன்றைய தினம் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதன் காரணமாகப் பல்வேறு போராட்ட இடங்களிலும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தைக் காலையிலிருந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உழவர் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சாம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் மூத்த உறுப்பினர், விவசாயி தலைவர் அபிமன்யு கோஹர் கூறுகையில், ''மகாத்மா காந்தியின் நினைவு தினத்திற்காக இன்றைய தினம் நாங்கள் உணணாவிரதம் மேற்கொண்டுள்ளோம்.
ஆளும் மத்திய அரசு எங்கள் மீது அவதூறு கற்பித்து அமைதியான போராட்டத்தை அழிக்க முயல்கிறது. ஆனால், வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் அவர்களுடன் சேருவதால் தொடர்ந்து நடக்கும் போராட்டம் பலம் பெறும்'' என்றார்.