

புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவில் இன்று இணைந்தார்.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய தொழிலதிபர் ராமு (எ) ராதாகிருஷ்ணனின் 2-வது மனைவி எழிலரசி. தொழில் போட்டி காரணமாக 2013-ல் ராமு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவும், புதுச்சேரி முன்னாள் பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமாரும் காரணம் என எழிலரசி தரப்பினர் கருதினர்.
இதையடுத்து ராமு கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அய்யப்பன், ராமுவின் முதல் மனைவி வினோதா ஆகியோர் 2015-ல் கொல்லப்பட்ட நிலையில், 2017-ல் நிரவியில் வி.எம்.சி.சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி பிறகு ஜாமீனில் வெளிவந்த எழிலரசியை, 2018-ல்குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதையடுத்து எழிலரசி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் காரைக்கால் நேதாஜி நகரில் வசித்து வந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி எழிலரசி மீது மிரட்டல் புகார் வந்ததையடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் எனக் கருதி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த எழிலரசி இன்று புதுச்சேரியில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
தற்போது நிரவி திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்ஆர்ஆர் பேரவை நிறுவனராகவும், சமூக சேவகியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டு எழிலரசி இணைந்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "ஏராளமானோர் வந்து சந்தித்து தற்போது கட்சியில் இணைகின்றனர். ஆன்லைனிலும் கட்சியில் இணைகின்றனர். நீங்கள் குறிப்பிடுபவருக்குப் பொறுப்பு ஏதும் கட்சியில் தரப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.