

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். அனைத்துத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலின் நகல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் இடம் பெறாதோர், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காகச் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நவம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும், டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் நடத்தப்பட்டது. இந்தச் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் படிவம்-6, 7, 8 மற்றும் படிவம் 8 ஏ உள்ளிட்ட விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்கினர்.
இந்தப் படிவங்கள் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு, வாக்காளர் பதிவு அலுவலரால் இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இன்று காலை வெளியிட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
''வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) என 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 6,12,857 ஆண் வாக்காளர்களும், 6,51,091 பெண் வாக்காளர்களும், 140 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 லட்சத்து 64 ஆயிரத்து 088 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் 18-19 வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 46,264 ஆக இருந்தது. இவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில், 23,800 பேர் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்.
இருப்பினும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர் தொடர்ந்து மனு அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக அதாவது, www.nvsp.in என்ற தேசிய இணையதளம் அல்லது Voter Helpline App மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,301 வாக்குச்சாவடி மையங்களிலும், மாவட்ட இணையதளத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதைப் பார்த்து பொதுமக்கள் பயன்பெறலாம்''
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று வெளியிட்டார்.
அப்போது அவர் பேசும்போது, ''ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு என 4 தொகுதிகள் உள்ளன. இதில், இன்று (நேற்று) வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5,00,626 ஆண் வாக்காளர்களும், 5,27,127 பெண் வாக்காளர்களும், 51 மூன்றாம் பாலித்தனவர் என மொத்தம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 804 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியல் 584 வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர், ஆர்டிஓ அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இந்தப் பட்டியலில் இடம் பெறாதோர் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்'' என்று கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என மொத்தம் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 9 லட்சத்து 38 ஆயிரத்து 692 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பட்டியலில் இடம் பெறாதவர்களுக்காக சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது 22,166 பேர் கூடுதலாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4,73,591 ஆண் வாக்காளர்களும், 4,87,195 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேர் என மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரத்து 858 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற விரும்புவோர் தொடர்ந்து விண்ணப்பப் படிவங்களை அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 1,030 வாக்குச்சாவடி மையங்கள், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி, துணை ஆட்சியர்கள் அப்துல்முனீர், லட்சுமி, பூங்கொடி, தேர்தல் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் விவரம்:
வேலூர் மாவட்டம்
வ.எண் தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
1 வேலூர் 1,21,101 1,30,243 26 2,51,370
2 காட்பாடி 1, 19,583 1,27,813 32 2,47,428
3 அணைக்கட்டு 1, 22,995 1,30,344 37 2,53,376
4 கே.வி.குப்பம் 1, 09,836 1,14,389 05 2,24,230
5 குடியாத்தம் 1,39,342 1,48,302 40 2,87,684
மொத்தம் 6,12,857 6,51,091 140 12,64,088
திருப்பத்தூர் மாவட்டம்:
1 வாணியம்பாடி 1,22,012 1,25,845 37 2,47,894
2 ஆம்பூர் 1,14,905 1,21,902 12 2,36,819
3 ஜோலார்பேட்டை 1,18,449 1,20,010 07 2,38,466
4 திருப்பத்தூர் 1,18,225 1,19,438 16 2,37,679
மொத்தம் 4,73,591 4,87,195 72 9,60,858