ஒரே வருமானம், பல பொறுப்புகள்: குடும்பங்கள் நிதிப் பாதுகாப்பை எப்படி மறுபரிசீலனை செய்கின்றன?

ஒரே வருமானம், பல பொறுப்புகள்: குடும்பங்கள் நிதிப் பாதுகாப்பை எப்படி மறுபரிசீலனை செய்கின்றன?
Updated on
4 min read

ஒரு குடும்பத்தின் அனைத்து செலவுகளும் ஒரே வருமானத்தைச் சார்ந்திருக்கும்போது, மாதச் சம்பளம் என்பது அன்றாடச் செலவுகளுக்கான பணம் மட்டும் இல்லை. வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள், பெற்றோரின் பராமரிப்பு மற்றும் எதிர்கால சேமிப்பு போன்ற பல பொறுப்புகள் அந்த ஒரே வருமானத்துடன் இணைந்திருக்கின்றன. இதனால், இன்றைய குடும்பங்கள் சேமிப்பை மட்டும் நம்பாமல், எதிர்பாராத சூழ்நிலையில் வருமானம் பாதிக்கப்பட்டால் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு தொடர்ந்து இயங்கும் என்பதையும் முன்கூட்டியே சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

இதற்காக, குடும்பங்கள் அவசரகால நிதி, கடன் மேலாண்மை மற்றும் திட்டமிட்ட சேமிப்புடன் ஆயுள் காப்பீடு போன்ற பாதுகாப்பு வாய்ப்புகளையும் பரிசீலிக்கின்றன. எதிர்பாராத விதமாக வருமானம் தடைப்பட்டாலும் குடும்பத்தின் முக்கியமான பொறுப்புகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதே இன்று நிதிப் பாதுகாப்பின் முக்கிய நோக்கமாக மாறி உள்ளது.

இன்று குடும்ப நிதியை நிர்வகிப்பது ஏன் சிக்கலாகியுள்ளது?

உணவு, வீடு மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளைத் தாண்டி, இன்று பல குடும்பங்கள் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் திறன் மேம்பாடு, வயதான பெற்றோரின் பராமரிப்பு, கடனுக்கான மாதத் தவணைகள் மற்றும் நீண்டகால சேமிப்பு இலக்குகள் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்க வேண்டியுள்ளது. குடும்பத்தின் நிதிப் பொறுப்புகள் பல திசைகளில் அதிகரித்துள்ளதால், முந்தைய தலைமுறைகளை விட இன்றைய தலைமுறை அதன் குடும்ப பட்ஜெட்டை நிர்வகிப்பது அதிக சிக்கலானதாக ஆகியுள்ளது.

குடும்பச் செலவுகளை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும் சில காரணிகள்:

● உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு.

● வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடன் மாதத் தவணைகள்.

● குழந்தைகளின் பள்ளி மற்றும் உயர் கல்விச் செலவுகள்.

● மருத்துவம் மற்றும் நீண்டகால பராமரிப்புக்கான செலவுகள்.

இந்தச் செலவுகளில் ஏதேனும் ஒன்று திடீரென அதிகரித்தாலும், குடும்பத்தின் மாதாந்திர நிதித் திட்டம் மாற்றம் அடையும். எனவே, தற்போதைய செலவுகளை மட்டும் கண்காணிப்பதற்கு பதிலாக, எதிர்கால நிதித் தேவைகளையும் குடும்பங்கள் முன்கூட்டியே கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரே வருமாமுள்ள குடும்பங்கள் தற்போதைய தேவைகளையும் எதிர்கால இலக்குகளையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன?

ஒற்றை வருமானத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கு, உடனடி குடும்பச் செலவுகளையும் நீண்டகால நிதி இலக்குகளையும் சமநிலைப்படுத்துவது ஒரு முக்கிமான சவாலாக இருக்கலாம். சேமிக்க வேண்டுமா என்பது பெரும்பாலும் கேள்வியாக இருப்பதில்லை. கிடைக்கும் வருமானத்தை தற்போதைய பொறுப்புகளுக்கும் எதிர்காலத் தேவைகளுக்கும் நிதிச் சுமை ஏற்படாத வகையில் எவ்வாறு பகிர்வது என்பதே முக்கியமானது.

பல குடும்பங்கள் முதலில் அத்தியாவசியச் செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. அதன் பிறகு அவசரகாலத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பு போன்றவைகளுக்காக தனித்தனியாக நிதி ஒதுக்குகின்றன.

குடும்ப வருமானம் எதிர்பாராத விதமாக பாதிக்கப்பட்டால், சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் நிதி நிச்சயமின்மையை குறைக்க உதவும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சில குடும்பங்கள் பரிசீலிக்கலாம். இருப்பினும், எந்தவொரு திட்டத்தையும் தேர்வு செய்வதற்கு முன் தற்போதைய சேமிப்பு, குடும்ப பொறுப்புகள், எதிர்கால நிதி இலக்குகள் மற்றும்  திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பொருத்தத்தை மதிப்பிடுவது அவசியம்.

குடும்பத்தின் முதன்மை வருமானம் ஈட்டுபவர் வருமானம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் என்ன நடக்கலாம்?

குடும்பத்தின் முக்கிய வருமானம் திடீரென நின்றுவிட்டாலும், மாதாந்திரப் பொறுப்புகள் நின்றுவிடுவதில்லை. வீட்டு வாடகை, கடன் மாதத் தவணைகள், கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட செலவுகள் தொடர்ந்து இருக்கும்.

இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பத்தின் நீண்டகால நிதிப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு ஆயுள் காப்பீடு போன்ற பாதுகாப்பு வாய்ப்புகளை குடும்பங்கள் பரிசீலிக்கலாம். குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் முதன்மை வருமானம் ஈட்டுபவரைச் சார்ந்திருக்கும் நிலையில், எதிர்பாராத வருமான இழப்பால் ஏற்படக்கூடிய நிதிச் சுமையை நிர்வகிக்க இது உதவக்கூடும்.

காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்யும்போது தற்போதைய வருமானத்தை மட்டும் பார்க்காமல், நிலுவையில் உள்ள கடன்கள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் மற்றும் குடும்பத்தின் எதிர்காலச் செலவுகளையும் கருத்தில் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

நிதிப் பாதுகாப்பிற்காக பாரம்பரிய சேமிப்பைத் தாண்டி குடும்பங்கள் ஏன் சிந்திக்கின்றன?

வங்கி சேமிப்பு, நிலையான வைப்புத்தொகை மற்றும் தங்கம் போன்ற பாரம்பரிய சேமிப்பு முறைகளை இன்னும் பல குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால் சேமிப்பும் வருமானப் பாதுகாப்பும் ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுபவை அல்ல.

பாரம்பரிய சேமிப்புகள் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தாலும்,  வேறு வேறு நிதித் தேவைகளுக்கு  வேறு வேறு தீர்வுகள் தேவைப்படலாம் என்பதை குடும்பங்கள் அதிகமாக உணரத் தொடங்கியுள்ளன. சேமிப்பு காலப்போக்கில் சொத்துகளை உருவாக்க உதவலாம். அவசரகால நிதி குறுகியகால நிதி தடைகளை சமாளிக்க உதவும். பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் குடும்பத்தின் நிதிச் சுமையை குறைக்க உதவக்கூடும்.

ஒரே நிதி முறையை மட்டும் நம்புவதற்கு பதிலாக, பல குடும்பங்கள் வெவ்வேறு இலக்குகளுக்காக பல நிதி வழிகளை இணைத்து பயன்படுத்துகின்றன.

சேமிப்பை மட்டும் நம்புவது அனைத்து வகையான நிதி அபாயங்களையும் சமாளிக்க போதுமானதாக இருக்காது. இதனால், குடும்பங்கள் குறுகியகாலத் தேவைகள், நீண்டகால இலக்குகள் மற்றும் வருமானப் பாதுகாப்புத் தேவைகளை தனித்தனியாகப் பிரித்து திட்டமிடத் தொடங்கியுள்ளன.

உயர் கல்வி, ஓய்வுக்காலம் அல்லது பிற நீண்டகால இலக்குகளை திட்டமிடும் குடும்பங்கள், பாரம்பரிய சேமிப்பு வாய்ப்புகளுடன் உத்தரவாத வருமானத் திட்டத்தையும் பரிசீலிக்கலாம். அத்தகைய திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன், பாலிசியின் காலம், பணம் வழங்கப்படும் முறை, கிடைக்கும் பலன்கள், காப்பீட்டுப் பாதுகாப்பு மற்றும் பொருந்தும் விதிமுறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது அவசியம். அதன் பின்னரே அது குடும்பத்தின் நிதி இலக்குகளுக்கு பொருத்தமானதா என்பதை மதிப்பிட முடியும்.

இன்றைய பெற்றோரின் நிதிப் பொறுப்புகள் எவ்வாறு மாறியுள்ளன?

இன்றைய பெற்றோரின் பொறுப்புகள் குழந்தைகளின் பள்ளிக் கல்வியுடன் முடிவதில்லை. உயர் கல்வி, திறன் மேம்பாடு, மருத்துவம், திருமணம் மற்றும் வாழ்க்கையின் பிற முக்கிய இலக்குகளுக்கும் முன்கூட்டிய நிதித் திட்டமிடல் தேவைப்படுகிறது.

பல குடும்பங்களில், வயதான பெற்றோரின் மருத்துவ மற்றும் அன்றாட பராமரிப்புச் செலவுகளும் இந்தப் பொறுப்புகளுடன் சேர்கின்றன. இதனால், ஒரே வருமானத்தில் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளையும், வயதான பெற்றோரின் மருத்துவத் தேவைகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நிலை உருவாகலாம்.

பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

● குழந்தைகளின் கல்விக்கான நீண்டகால சேமிப்பு.

● குடும்பத்திற்கான அவசரகால நிதி.

● வயதான பெற்றோரின் மருத்துவ மற்றும் பராமரிப்புத் தேவைகள்.

● வீட்டுக் கடன் மற்றும் பிற கடன் பொறுப்புகள்.

இந்த இலக்குகளுக்கான நிதியை ஆரம்பத்திலிருந்தே தனித்தனியாகப் பிரித்து வைத்தால், ஒரு செலவு மற்றொரு முக்கியமான நிதி இலக்கைப் பாதிக்கும் வாய்ப்பைக் குறைக்க முடியும்.

நீண்டகால குடும்பத் திட்டமிடலில் வருமானப் பாதுகாப்பு ஏன் முக்கியமானது?

வீடு வாங்குதல், குழந்தைகளின் உயர் கல்விக்கான நிதியை உருவாக்குதல் அல்லது ஓய்வுக்கால வாழ்க்கையைத் திட்டமிடுதல் போன்ற இலக்குகள் பல ஆண்டுகள் தொடரும் வருமானத்தைச் சார்ந்திருக்கின்றன. இன்று பெறப்படும் வீட்டுக் கடன் பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். அதேபோல், குழந்தையின் உயர் கல்விக்குத் தேவையான தொகையையும் ஒரே நாளில் உருவாக்க முடியாது.

எனவே, வருமானம் எப்போதும் தடையின்றி தொடரும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மட்டும் திட்டமிடுவது போதுமானதல்ல. வருமானம் பாதிக்கப்பட்டால் கடன்கள் மற்றும் அத்தியாவசியச் செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் குடும்பங்கள் முன்கூட்டியே பரிசீலிக்க வேண்டும்.

வருமானத்தில் ஏற்படும் இடையூறு குடும்பச் செலவுகள், கல்வித் திட்டமிடல் அல்லது தொடர்ந்து செலுத்த வேண்டிய கடன் தவணைகளைப் பாதித்தால், நீண்டகால நிதி இலக்குகளை அடைவது சிரமமாகலாம். அதனால், நீண்டகால நிதித் திட்டங்களை உருவாக்கும்போது பல குடும்பங்கள் வருமானப் பாதுகாப்பையும் ஒரு முக்கிய அம்சமாகக் கருதுகின்றன.

காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும்போது நிலுவையில் உள்ள கடன்கள், மாதாந்திர குடும்பச் செலவுகள், குழந்தைகளின் வயது, எதிர்கால கல்விச் செலவுகள் மற்றும் வருமானத்தைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்த என்ன நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கலாம்?

நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ஒரே நேரத்தில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சிறிய நடவடிக்கைகள்கூட நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

● சில மாதங்களுக்கான அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்கக்கூடிய அவசரகால நிதியை உருவாக்குதல்.

● தற்போதைய சேமிப்பு, பாதுகாப்புத் தொகை மற்றும் கடன் பொறுப்புகள் குடும்பத்தின் தற்போதைய தேவைகளுடன் இன்னும் பொருந்துகின்றனவா என்பதை மறுபரிசீலனை செய்தல்.

● அதிக வட்டி கொண்ட கடன்களை குறைப்பதற்கு முன்னுரிமை அளித்தல்.

● கல்வி, வீடு மற்றும் ஓய்வுக்காலத்திற்கான சேமிப்புகளைத் தனித்தனியாக வைத்திருத்தல்.

● குடும்பத்தின் பாதுகாப்புத் தேவைகளை அவ்வப்போது மறுபரிசீலனை செய்தல்.

குழந்தை பிறப்பு, புதிய கடன் பெறுதல் அல்லது வயதான பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பு அதிகரித்தல் போன்ற முக்கியமான வாழ்க்கை மாற்றங்கள் குடும்பத்தின் நிதி முன்னுரிமைகளை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றக்கூடும். இத்தகைய மாற்றங்கள் ஏற்படும் போது நிதித் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்வது எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க உதவும்.

இன்று அதிகமான குடும்பங்கள் நிதிப் பாதுகாப்பிற்கு ஏன் முன்னுரிமை அளிக்கின்றன?

உயரும் வாழ்க்கைச் செலவுகள், கடன் பொறுப்புகள், நீண்டகால கல்விச் செலவுகள் மற்றும் மருத்துவத் தேவைகள் ஆகியவை குடும்பங்களை எதிர்காலத்தை முன்கூட்டியே திட்டமிடத் தூண்டுகின்றன. குறிப்பாக ஒரே வருமானத்தைச் சார்ந்த குடும்பங்களில், சில மாதங்கள் வருமானம் இல்லாத நிலையே குடும்ப நிதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

எவ்வளவு சேமிப்பு உள்ளது என்பதை மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக, அந்தச் சேமிப்பால் எத்தனை மாதங்களுக்கான செலவுகளை நிர்வகிக்க முடியும், குடும்பத்திற்கு எவ்வளவு கடன் உள்ளது, முக்கியமான செலவுகள் என்ன, நிதிப் பாதுகாப்புத் தேவைகள் மாறியுள்ளனவா என்பதையும் தொடர்ந்து மதிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு வருமான ஆதாரம் இருக்கலாம். ஆனால் அந்த வருமானம் பல பொறுப்புகளைத் தாங்கிக்கொண்டிருக்கலாம்.

குழந்தைகளின் கல்வி, வீட்டுக் கடன், பெற்றோரின் பராமரிப்பு, அன்றாடச் செலவுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் அனைத்தும் அதையே சார்ந்திருக்கலாம்.

எனவே, சேமிப்பு, அவசரகால நிதி, கடன் மேலாண்மை மற்றும் பொருத்தமான நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரே குடும்ப நிதித் திட்டத்தின் வெவ்வேறு பகுதிகளாகக் கருதலாம். வருமானம் அல்லது குடும்பப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது, எதிர்பாராத சூழ்நிலைகளிலும் குடும்பத்தின் முக்கியமான இலக்குகள் தொடர உதவும்.

ஒரே வருமானம், பல பொறுப்புகள்: குடும்பங்கள் நிதிப் பாதுகாப்பை எப்படி மறுபரிசீலனை செய்கின்றன?
உடல் பருமன்: எடையைத் தாண்டிய பிரச்சினை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in