

வாசிப்பின் அவசியத்தை வலி யுறுத்தும் வகையில் வாசிப்புத் திருவிழா எனும் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை முன்னெடுத்துள்ளது. புத்தக வாசிப்பை இளைய தலைமுறையினருடன் இணைந்து கொண்டாடும் இந்நிகழ்வு செப். 6-ம் தேதி (சனிக்கிழமை) காஞ்சிபுரம் காமராஜர் சாலையிலுள்ள தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாயக் கூடம் அரங்கில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி மற்றும் ஓலோ கிட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் உடன் இணைந்து நடத்துகிறது.
செய்திகளின் உண்மைத் தன்மை: ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும் சுய சிந்தனைக்கும் வாசிப்பு மிகவும் அவசியம். நம்முடைய வரலாற்றையும் பண்பாட்டையும் வாசிப்பே நமக்கு வெளிச்ச மிட்டுத் துலங்கச் செய்கிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பம் இன்றைக்கு நம் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஆனாலும் காட்சி ஊடகங்கள் நமக்கு ஒற்றைத் தன்மையான கருத்துகளையே அளிக்கின்றன. சமூக ஊடகங்களின் வழியே நொடிக்கொரு செய்தி நம் பார்வைக்கு வந்தாலும், செய்தியின் உண்மைத் தன்மையை அச்சு ஊடகங்களின் வழியாக மட்டுமே நம்மால் உறுதி செய்ய முடிகிறது.
நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு என வாசிப்பை சுவாசிக்கும் சமூகம் தான் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்க முடியும். புத்தக வாசிப்பு என்பது தனிப்பட்ட முறையிலும் சமூகத்துக்கும் நன்மை அளிக்கக்கூடிய செயல். வாசிப்பின் வழி அவரவர் கற்பனைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப பன்முகமான கருத்துகள் உருவாகும்.
வாசிப்பின் சிறப்பினை இளைய தலைமுறையினரூடன் சேர்ந்து கொண்டாடும் இவ்விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் எழுத்தாளருமான வெ.இறையன்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மேலும் வாசிப்பின் அவசியம் குறித்தும் அப்போது அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.
விழாவில் பங்கேற்க..: வாசிப்புச் செயல்பாட்டை போற்றும் இவ்விழா வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் https://www.htamil.org/VTK Vaasippu Thiruvizha Kanchipuram/www.htamil.org என்கிற இணைப்பில் பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம். வாசிப்பு ருசி அறிந்த அனைவரும் வரலாம். கூடுதல் தகவல்களுக்கு 89396 69717 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.