

சென்னை: இந்திய அரசுப் பணி தேர்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், சங்கர் ஐஏஎஸ் அகாடமி, ‘தி இந்து’குழுமத்துடன் ஆர்எம்கே கல்விக் குழுமம் இணைந்து ‘அரசாங்க அதிகாரியாக உருவாகுங்கள்’ என்ற தலைப்பில் நேற்று ஒரு வழிகாட்டுதல் அமர்வை நடத்தியது.
ஆர்எம்கே பொறியியல் கல்லூரி முதல்வர் கே.ஏ.முகமது ஜுனைத் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்எம்டி பொறியியல் கல்லூரி முதல்வர் என்.அன்புச்செழியன் முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் ‘தி இந்து’ மூத்த பிராந்திய மேலாளர் மற்றும் கிளஸ்டர் தலைவர் பாபு விஜய் பேசும்போது, யுபிஎஸ்சி தேர்வுக்கு நாளிதழ்களை படிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தற்போதைய நிகழ்வுகள், அரசியல் வளர்ச்சிகள், ஆழமான கட்டுரைகள் ஆகியவை தேர்வர்களுக்கு அவசியம் என்றார்.
ஆர்எம்கே கல்விக் குழும துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், அரசுப் பணியாளர் ஆகும் மாணவர்களுக்கு உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு முக்கியம் எனக் கூறினார். தமிழக காவல் துறை முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ஜாங்கிட் பேசும்போது, அரசுப் பணியாளராக வெற்றி பெறுவது எப்படி என்பதையும், இதற்கு கண்ணோட்டம், நம்பிக்கை, கடின உழைப்பு, ஒழுங்கு, நிலைத்தன்மை, திட்டமிடல், நேர மேலாண்மை, நோக்க முள்ள வெற்றி ஆகிய 8 முக்கிய அம்சங்கள் தேவை என்றார்.
திருவள்ளூர் ஆட்சியர் எம்.பிரதாப் பேசும்போது, பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஆட்சியர் ஆகும் வரையிலான தனது பயண அனுபவத்தை பகிர்ந்தார். யுபிஎஸ்சி தேர்வுக்கு நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார். ஆர்எம்கே கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை உரை நிகழ்த்தி, அனைத்து மாணவர்களும் யுபிஎஸ்சி தேர்வுக்குத்தயாராக உற்சாகமளித்தார். ஆர்எம்கே பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் என். சுரேஷ்குமார் நன்றி கூறினார்.