

சிங்கப்பூரைக் கவிதையூர் என்பதில் இரண்டு பொருள்கள் உண்டு. ஊரே கவிதையாக விளங்குவது ஒன்று. கவிதையை ஊற்றாய் வழங்குவது இன்னொன்று. சிங்கப்பூரில் முதலில் விளைந்த இலக்கியம் கவிதை இலக்கியம்தான்.
கவிதை முன்னோடி: 1872இல் ‘முனாஜா திரட்டு’ என்கிற கவிதை நூலை எழுதியவர் நாகூர் முஹம்மது அப்துல் காதிறுப்புலவர். இதுவே சிங்கை இலக்கியத்தின் முன்னோடி நூலாகத் திகழ்கிறது. 1868இல் ‘நன்னெறித் தங்கம் பாட்டு’ என்கிற நூலை சி.வெ.நாராயணசாமி நாயகர் எழுதி வெளியிட்டிருக்கிறார். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடியாகக் கருதப்பட வேண்டியர் இவரே என்று சுப.திண்ணப்பன் கூறுகிறார். மலேசிய இலக்கிய வரலாற்றை நோக்கும்போது சிங்கப்பூரில்தான் முதல் தமிழிலக்கியம் உருவாயிற்று என்று இரா.தண்டாயுதம் பாராட்டுகிறார்.
1960லிருந்து சிங்கப்பூரில் கவிதைக்காக அர்ப்பணித்துக்கொண்ட கவிஞர்கள் அதிகம். ஐ.உலகநாதன், பரணன், க.து.மு.இக்பால், முருகடியான், பாத்தேறல் இளமாறன், பாத்தூரல் முத்துமாணிக்கம், கவிஞரேறு அமலதாசன் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் மரபுக் கவிதை இலக்கியத்தை வழிநடத்தினார்கள். புதுக்கவிதையைச் சிங்கப்பூரில் முதலில் தொடங்கியவர் சிங்கப்பூர் இளங்கோவன்.
2000ஆம் ஆண்டில் கவிதைக்காகப் பிச்சினிக்காடு இளங்கோவால் தொடங்கப்பட்ட அமைப்பு ‘கடற்கரை சாலைக் கவிமாலை’. இந்த அமைப்பு அண்மையில் வெள்ளிவிழா கண்டது. மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை கவிதை சந்திப்பு நடத்துகிறது. ஆண்டுதோறும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றிய தமிழ்ச் சான்றோர்க்கு கணையாழி விருது, சிங்கப்பூரில் வெளியிடப்படும் கவிதை நூலுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
அமைப்புகளும் தமிழ்ப்பணியும்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் முத்தமிழ் விழா, கண்ணதாசன் விழா, கம்பன் விழா ஆகியவற்றை நடத்துகிறது. மாதந்தோறும் கதைக்களம் நடத்தி மாணவர்களின் ஆற்றலை வளப்படுத்துகிறது. தமிழவேள் விருது, கண்ணதாசன் விருது, ஆனந்த பவன் மு.கு.ராமச்சந்திரா பெயரில் சிறந்த (கட்டுரை, கவிதை, சிறுகதை) நூல்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்குகிறது.
சிங்கப்பூரில் முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை 2011-லும் முதல் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை 2025இலும் நடத்திய பெருமை இந்த அமைப்பையே சாரும். தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகம் குறள் விழா, பாரதி விழா, ஒளவையார் விழா நடத்தி பாரதி விருதும் ஒளவையார் விருதும் வழங்குகிறது. சிங்கப்பூர் எங்கும் பேச்சாளர் மன்றத்தை உருவாக்கி தமிழில் பேச ஊக்கப்படுத்துகிறது.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் உருவாக்கிய சிங்கப்பூர் தமிழர்களின் கலைக்களஞ்சியம் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவற்றைத் தவிர பல்வேறு இலக்கிய அமைப்புகள் சிங்கையில் தமிழ்ப் பணி ஆற்றிவருகின்றன.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி மாதமாகச் சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடைபெறுகிறது. வளர்தமிழ் இயக்கமும் தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழுவும் அதற்குப் பேராதரவு தந்து தமிழ் சிறக்க, செழிக்க உதவுகின்றன. பேச்சாற்றலை வளர்க்கும் விதமாக மாணவர்கள் பங்குபெறும் சொற்போர்; சொற்களம் நிகழ்ச்சியை, சமூக மன்றங்களின் இந்திய நற்பணிச் செயற்குழு தேசிய அளவில் நடத்தி இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது சிறப்பான ஒன்று.
சிங்கப்பூரில் வசந்தம் தொலைக்காட்சி, ஒலி 968 வானொலி, தமிழ் முரசு நாளிதழ், சிராங்கூன் டைம்ஸ், மக்கள் மனம் போன்ற மாத இதழ்கள் சிங்கப்பூர்வாசிகளிடம் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. சிங்கப்பூர் அரசும் தேசிய அளவில் இலக்கியத்துக்காகப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறது.
- பிச்சினிக்காடு இளங்கோ