

ஆசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டிகளில் சீனாவின் பெய்ஜிங், அபுதாபியைத் தாண்டி சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. தற்போது உலக அளவில் ஐந்தாவது ஸ்மார்ட் சிட்டியாக உள்ளது. இதற்குக் காரணம், அந்த நாடு-நகரம் முன்கூட்டியே திட்டமிட்டு தொழில்நுட்பப் புதுமைகளை நடைமுறைப்படுத்தி வருவதுதான். சிங்கப்பூர் கண்டுள்ள இந்த அதிநவீன வளர்ச்சிக்கு அரசியல் தலைவர்கள், அரசாங்க அமைப்புகள் அறிவார்ந்த சமூகப் பின்னணியிலான முன்னெடுப்புகளை எடுப்பதும் காரணம்.
திறன்மிகு சிங்கப்பூர்: உலகம் நவீனத் தொழில்நுட்பங்களைப் பரவலாகத் தழுவத் தொடங்குவதற்கு முன்னதாக 2014இலேயே ஸ்மார்ட் நேஷன் திட்டத்தை, சிங்கப்பூர் தொடங்கியது.
அதுவே திறன்மிகு சிங்கப்பூர் (Smart Nation) முன்னெடுப்பு. நவம்பர் 2014இல் திறன்மிகு சிங்கப்பூர் முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, அன்றைய சிங்கப்பூர் பிரதமர் லீ கூறுகையில், “நாம் கற்பனை செய்ததைத் தாண்டி, நமக்கான சாத்தியங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்” என்றார். அரசாங்கம், பொருளாதாரம், சமூகத்தில் மின்னணுப் பயன்பாட்டின் முன்னேற்றங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி.
மக்களுக்கு நெருக்கமாக... “திறன்மிகு சிங்கப்பூர் முன்னெடுப்பு குடிமக்கள், வணிக நிறுவனங்களுக்குப் பயனளித்துள்ளது. அத்துடன் இன்றைய நவீன உலகில் வேகமாக மாறிவரும் சூழ்நிலைகள், அவசரநிலைகளைச் சமாளிக்கும் நமது திறனை அதிகரித்துள்ளது.
மின்னணு சூழலில் அரசாங்கம் எவ்வாறு புதுமையான முறையில் செயல்படுகிறது என்பதைத் தொடர்ந்து மேம்படுத்துவோம். இதன் மூலம் மக்களுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்றுவோம்” என்று சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், திறன்மிகு சிங்கப்பூர் (Smart Nation) முயற்சியின் பொறுப்பாளராகவும் உள்ள டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
வலுவான அடித்தளம்: இந்தப் பின்னணியில் மின்னணுப் பொருளாதாரம், மின்னணு அரசு வசதிகள், மின்னணுச் சமூகம் ஆகியவற்றை உருவாக்க அனைவருக்கும் பயன்படக்கூடிய வலுவான திட்டங்களைச் சிங்கப்பூர் வகுத்துள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த மக்களின் பங்களிப்பு, கலாச்சாரத்தால் இயக்கப்படும் வலுவான அடித்தளங்கள் இங்கு உள்ளன.
தற்போது பல துறைகளில் நடைபெற்றுவரும் பரவலான தொழில்நுட்ப மாற்றம், மின்னணு உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம், சேவை வழங்குதல் போன்ற முக்கியத் தேசியத் திட்டங்களின் செயல்பாடு, பொது-தனியார் நிறுவனங்களின் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
30 ஆண்டு முன்னோடி: மின்னணுப் பொருளாதாரம் என்பது இணைம்வழி நடைபெறும் அனைத்துப் பொருளாதார பரிவர்த்தனைகள், செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது தரவு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரம். தனிப்பயனாக்கப்பட்ட, அர்த்தமுள்ள அனுபவங்களை இது வழங்குகிறது. புதிய வியாபார மாதிரிகளை உருவாக்கவும், 30 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கற்பனை செய்ய முடியாத வகையில் பொருளாதார மதிப்பை உருவாக்க நிறுவனங்களை இது அனுமதிக்கிறது.
என்ன காரணம்? - அந்த வகையில் ஆசியாவிலேயே பொருளா தாரத்தில் தொடர்ந்து சிங்கப்பூர் முன்னிலை வகிக்கக் காரணங்களாக இருப்பவை:
ஆசியாவில் முதலிடம்: சிங்கப்பூர் மின்னணுப் பொருளாதாரம் மூலம் உணவுத் தன்னிறைவுக்கான விவசாயம், வர்த்தகம்,
வங்கி சேவை-காப்பீடு, சுகாதாரம், சுற்றுலா, தொழிற்சாலைகள், கல்வி-பயிற்சி, நகர்ப்புறம்-போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் இன்றைக்கு ஆசியாவிலேயே மின்னணுப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ளது சிங்கப்பூர்.
- சிங்கை இளங்கோ