

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாநில பாடத் திட்டத்தைப் பின்பற்றி வரும் தனியார் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘அன்பாசிரியர் விருது’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியை டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. லெட்சுமி செராமிக்ஸ், பொன்வண்டுடிடர்ஜெண்ட் நிறுவனம், கிராமாலயா ஆகியவை நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.
மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதுடன் நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, அவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளை போதித்து,பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக ‘அன்பாசிரியர் விருது’கள் வழங்கப்பட்டன.
ஐந்தாம் ஆண்டாக ‘அன்பாசிரியர் விருது’ வழங்கும் நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு அரங்கில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விருதுக்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 549 ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதில் 160 ஆசிரியர்கள் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான ஆன்லைன் வழி நேர்காணல் தேர்வுக்குழுவினரால் நடத்தப்பட்டு, 40 ஆசிரியர்கள் அன்பாசிரியர் விருதுக்கும், 4 ஆசிரியர்கள் ‘முன்மாதிரி ஆசிரியர் விருதுக்கும்’ தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 44 ஆசிரியர்களுக்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.