ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருது: ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்
சென்னை: ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருதுகளை வழங்க ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமையுடன் காத்திருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெருவாரியான ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதுடன் நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வின் பங்குதாரர்களாக லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இந்த விருதுக்கு இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்? - விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.htamil.org/AA2025 என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதனுடன் சுயவிவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள் / வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான நேர்காணல் ஆன்லைன் வாயிலாக நடைபெறும். மூத்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள் அடங்கிய குழுவினர் ஆன்லைன் நேர்காணலை நடத்துவார்கள். தங்களது சாதனை சான்றிதழ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களுடன் ஆன்லைன் நேர்காணலில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் 2 மாவட்டங்கள் என 40 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் அன்பாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
வரும் 30-ம் தேதிக்குள் https://www.htamil.org/AA2025 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு மு.முருகேசனை 7401329364 என்ற செல்போன் எண்ணில் அல்லது murugesan.m@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம்.
