

சென்னை: கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரி அரங்கில் நாளை (மார்ச் 16) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என்ற ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்திய அரசின் வருமான வரித் துறை ஆணையர் வி.நந்தகுமார், காவல் துறை கண்காணிப்பாளர் (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு) ஏ.மயில்வாகனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் ஊக்க உரையாற்ற உள்ளனர். நாளை காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது.