Published : 05 Feb 2024 06:30 AM
Last Updated : 05 Feb 2024 06:30 AM

சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - ஆளப்பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: கடின உழைப்பு இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உறுதி

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - ஆளப்பிறந்தோம்’ வழிகாட்டு சோர்வடைய வேண்டாம். நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கைலக்கழக விவேகானந்தா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர். | படங்கள் : எஸ்.சத்தியசீலன் |

சென்னை: திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் தொடர் பயிற்சி இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதிபட தெரிவித்தார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்துதமிழ் திசை - ஆளப்பிறந்தோம்’ என்கிற, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நேற்று நடைபெற்றது. மாணவர்கள் காலை 8 மணி முதலே அண்ணா பல்கலைக்கழகம் நோக்கி வரத் தொடங்கி, ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஜெ.ராதாகிருஷ்ணன்

நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேசியதாவது: நான் 1989-ம் ஆண்டு படிக்கத் தொடங்கி, 1992-ல் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றேன். நாங்கள் படிக்கும் காலத்தில் பயிற்சிக் கையேடுகள், இணையதளம் போன்ற வசதிகள் இல்லை.

ஒன்றிரண்டு பயிற்சி மையங்களில் படிப்பவர்களிடம் புத்தகங்களைப் பெற்று நகல் எடுத்து, படிக்க வேண்டிய நிலைஇருந்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. இன்று அனைத்து தகவல்களும் இணையதளத்தில் எளிதில் கிடைக்கின்றன.

லட்சக்கணக்கான பங்கேற்பாளர்களை வடிகட்டவே முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எளிதில் தேர்ச்சி பெறலாம் என நினைக்கக்கூடாது. இந்தத் தேர்வில் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கேள்விகள் மூலம் தேர்வர்களை ஆச்சரியப்படுத்துவார்கள். தேர்வில் நீங்கள் பெறும் ஒவ்வொருமதிப்பெண்ணும் முக்கியம்.

எனவே, அதிக மதிப்பெண் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கவன சிதறலின்றி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்டபகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் முழு பாடத்திட்டங்களையும் படிக்க வேண்டும். மேலும், அதிகளவிலான மாதிரித் தேர்வுகளை எழுதி பயிற்சி பெற வேண்டும்.

உங்களை சுற்றி நடைபெறும் விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட எந்தளவு ஆழமாக படிக்கிறோம் என்பதே முக்கியம். அதேபோல், முதல் முயற்சியில் வெற்றி பெறாவிட்டால் சோர்வடைய வேண்டாம். நேர்மறையான எண்ணங்களுடன் முன்னேறி செல்ல வேண்டும். தொடர் பயிற்சி மற்றும் கடின உழைப்புடன் முயற்சித்தால் வெற்றி பெற்றுவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பூ.கொ.சரவணன்

இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் சுங்கத்துறை துணை ஆணையர் பூ.கொ.சரவணன், ஐஆர்எஸ் பேசியதாவது: நான் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரியில் நன்கு படிக்கும் மாணவன் கிடையாது. என்னால் முடியும் என்றால் உங்களாலும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியும். சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது 20 விதமான பணிகளுக்காக நடத்தப்படும் பொதுவான தேர்வு. முதல்நிலைத் தேர்வு தவிர்த்து முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் தமிழ் உட்பட 22 மொழிகளிலும் நடத்தப்படுகிறது.

எனவே, இந்த தேர்வெழுத மொழி ஒரு தடையில்லை. எனினும், ஆங்கில மொழிக் கற்றலும் அவசியமாகும். இந்த தேர்வில் வெற்றிபெற மனத்தடையைவிட்டு தன்னம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராகும்போது, முதலில் என்சிஇஆர்டி பாடநூல்களை முழுமையாக படித்துவிட வேண்டும். அதன்பின் பாடப்பிரிவு வாரியான வழிகாட்டி கையேடுகளைப் படிக்க வேண்டும். அதற்காக அதிகளவிலான வழிகாட்டி கையேடுகளைப் பின்பற்ற வேண்டியதில்லை.

தினசரி 2 செய்தித்தாள்களையாவது கட்டாயம்வாசிக்க வேண்டும். அப்போதுதான் நம்மைசுற்றி நடைபெறும் விஷயங்கள் குறித்த தகவல்கள் தெரியும். மேலும், உங்களின் கற்பனைத் திறனும் மேம்படும். 2013-ஆம் ஆண்டுக்குபின் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.

எனவே,இதற்கு முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை வைத்து பயிற்சி பெற வேண்டும். நேர்முகத் தேர்வில் நமது ஆளுமைத் திறன்தான்சரிபார்க்கப்படும். அதற்கான முன்தயாரிப்புகளை முறையாக மேற்கொண்டால் வெற்றியை வசமாக்கலாம். அதனால் சிவில் சர்வீஸ் தேர்வு என்ற பிரமிப்பை தவிர்த்து இலக்குடன் பயணித்தால் வெற்றி பெறலாம். இவ்வாறு பேசினார்.

மு.முருகேஷ்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் பேசியதாவது: கல்வியின் மூலமாக பெறுகிற வெற்றி வாழ்வில் நம்மை உயர்ந்த நிலையை நோக்கி கொண்டு செல்லும் என்பதை மனதில்கொண்டே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக இந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. அரசுப் பள்ளியில் படித்தவர்கள், தமிழ் வழியில் படித்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் என எவரும் முயற்சி செய்து, திட்டமிட்டு படித்தால் இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெறலாம்.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதன் மூலமாக அரசு நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளை வகிக்கலாம். நல்ல ஊதியம் பெறலாம்.இதையெல்லாம் கடந்து சாதாரண அடித்தட்டுமக்கள், வாழ்க்கை உயர்வதற்கு நல்ல பலசெயல்களை உங்களின் ஒற்றைக் கையெழுத்தால் நிறைவேற்றிட முடியும். யுபிஎஸ்சி தேர்வில் ஒருமுறை தோல்வியடைந்ததுமே, மனம்தளர்ந்துவிடக் கூடாது.

வெற்றி என்பது பெற்றுக்கொள்வது; தோல்வி என்பது கற்றுக்கொள்வது எனும் எண்ணத்தில், ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டால் நிச்சயம் உங்களால் வெற்றியாளர்களாக வலம்வர முடியும். இவ்வாறு பேசினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்த பயிற்றுநர் சந்துரு பேசும்போது, “சங்கர் ஐஏஎஸ்அகாடமியானது 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டு காலத்தில் யுபிஎஸ்சிபிரிவில் மட்டும் இதுவரை 2,200-க்கும் மேற்பட்டோர் சிவில் சர்வீஸ் பிரிவில் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வுக்கு நிகராக எங்கள் மாதிரித் தேர்வு வினாத்தாள்கள் கடினமாக இருக்கும். இதனால் பயிற்சி பெறுபவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதேபோல், போதிய வசதியில்லாத மாணவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் யூடியூப் சேனல் வாயிலாக பயிற்சி வழங்குகிறோம். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற திறன் மட்டும் போதாது. எந்த சூழலையும் எதிர்கொள்ளும் தன்மை, நெகிழ்வுத்தன்மை, நன்னடத்தை உள்ளிட்ட பண்புகள் அவசியம்” என்றார்.

இந்நிகழ்வில், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி, ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு, பாடத்திட்டம், தேர்வுக்குத் தயாராகும் முறை உட்பட பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்தாளர்கள் விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x