

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அதிகாரிகள்.
சென்னை: மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் (CVC) உத்தரவுகளின்படி, காமராஜர் துறைமுக நிறுவனமும் சென்னை துறைமுக ஆணையமும் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ முன்னிட்டு கடந்த அக்.27 முதல் நவ.2-ம் தேதி வரைகண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைபிடித்தன.
திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்காணிப்பு விழிப்புணர்வு அலுவலர்களுக்கான ‘தென்னிந்திய மண்டல நிறுவனங்களுக்கான பிராந்திய பயிற்சி / பணிமனை’ ஆக. 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைச் சென்னை துறைமுகமும், இந்தியன் வங்கியும் இணைந்து நடத்தின. சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தின் அதிகாரிகளுக்கான பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சியின்போது தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரை / குறுங்கவிதை எழுதுதல் மற்றும் விநாடி-வினா போட்டிகளும் நடைபெற்றன.
வெளிப்புறத் தொடர்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுவாழ்வில் ஊழலை எதிர்க்கும் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், பொன்னேரி லோகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நடைபயண நிகழ்ச்சியும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி, போஸ்டர் தயாரிப்பு போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த விழாவில், காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளி கிருஷ்ணன் ஐடிஏஎஸ், காமராஜர் துறைமுக நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுக ஆணைய துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். நிறைவு விழாவில் பங்கேற்ற துறைமுக அதிகாரிகள் பேசியதாவது;
காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ நிறைவையொட்டி ‘இந்து தமிழ் திசை’யுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது முன்னதாக வெளியிடப்பட்ட ‘கண்காணிப்பு குரல்’ புத்தகத்துடன் தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், சென்னை துறைமுக ஆணைய துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுக நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா
எஸ்.முரளி கிருஷ்ணன்: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு, திறன் மேம்பாடு, சொத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் உள்ளிட்டவற்றில் மத்திய விழிப்புணர்வு ஆணையம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கேற்ப நாம் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்ற வேண்டும்.
ஜே.பி.ஐரீன் சிந்தியா: நாம் ஒவ்வொரு வரும் ‘விழிப்புணர்வு தூதராக’ இருந்து, ஊழலைத் தடுக்கவும், சமூகத்தில் நெறிமுறை மற்றும் விழிப்புணர்வு கலாச்சாரத்தை உருவாக்கவும் வேண்டும்.
எஸ்.விஸ்வநாதன்: ஊழல் தடுப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து, முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.
சுனில் பாலிவால்: ஊழல் என்பது லஞ்சம் பெறுதல் மட்டுமல்ல; ஒருவரின் பொறுப்பை நேர்மையாகவும் அக்கறையுடனும் நிறைவேற்றாததும் ஊழலாகும். மாணவர் சமூகத்திடம், நேர்மையைப் பேணும் நபர்கள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு: 10-வது ஆண்டாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியும், ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடைபெற்றன.
ஆன்லைன் விநாடி-வினா போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்திருந்தது. இப்போட்டிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள், கடந்த வியாழனன்று சென்னை துறைமுக அரங்கில் நடைபெற்ற கண்காணிப்பு விழிப்புணர்வுவார நிறைவு விழாவில் வழங்கப்பட்டன.
சீனியர் பிரிவில் கீழ்ப்பாக்கம் சின்மயாவித்யாலயா பள்ளி மாணவி ஹெச்.சிவானி முதலிடத்தையும், நந்தம்பாக்கம் ஆர்மி பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவன் ஜெயத்ராசர்க்கார் இரண்டாமிடத்தையும், அண்ணா நகர் மேற்கு (விரிவு) சென்னை பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.வருணிகா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
ஜூனியர் பிரிவில் கே.கே.நகர் பிஎஸ்பிபி சீனியர் செகண்ட்ரி ஸ்கூல் மாணவர் நவேலன் எம்.சிவக்குமரன் முதலிடத்தையும், நந்தம்பாக்கம்
ஆர்மி பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவி அஜூனி கவுர் இரண்டாமிடத்தையும், மறைமலை நகர் சிவானந்த ராஜாராம் செகண்ட்ரி ஸ்கூல் மாணவி நிர்விக்னா பீதா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியில், முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மெட்ரிக் ஹையர் செகண்ட்ரி ஸ்கூல் ஆசிரியை பி.லட்சுமி முதலிடத்தையும், தி.நகர் குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேனிலைப்பள்ளி ஆசிரியை எம். சசிகலா இரண்டாமிடத்தையும், பெரம்பூர் கலிகி ரங்கநாதன் மாண்ட் போர்ட் மெட்ரிக்ஹையர் செகண்ட்ரி ஸ்கூல் ஆசிரியை க.ஜெய மூன்றாமிடத்தையும் பெற்றனர்.நிறைவாக. முதுநிலை மேலாளர் (விஜி லென்ஸ்) பி.செந்தில் நன்றி கூறினார்.