

இந்தியாவில் மார்பக புற்றுநோய் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. 32.8 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் இறப்பு விகிதம் 64% ஆக உள்ளது. வருமுன் காப்பதே இதற்கான தீர்வாகும். இக்கொடிய நோயின் அறிகுறிகள், காரணிகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் எளிய முறையில் குணப்படுத்த முடியும்.
‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்' என்பது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொண்டு நிறுவனமாகும். கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஆரம்பநிலை கண்டறிதல் முகாம்களை நடத்தி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்தில் ‘பிங்க்டோபர்’ என்ற தலைப்பில் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா, கல்யாணமாயி உடன் இணைந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வருகிறது. சென்னை விமான நிலையம் முழுவதும் பிங்க் நிற விழிப்புணர்வு பாதைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது.
7-வது ஆண்டாக இந்த ஆண்டும் ‘பிங்க்டோபர்’ (Pinktober 2022) மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் 1 முதல் 31-ம் தேதிவரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ‘பிங்க் பெடல்’, ‘பிங்க் பார் மை மாம்’, ‘பிங்க் ரிப்பன் வாக்' போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. வாரம் இருமுறை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம், நோய் கண்டறிதல் முகாம் நடைபெற உள்ளது.
‘மார்பக புற்றுநோய் இல்லா இந்தியா 2030’-ஐ உருவாக்குவதே ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’-ன் லட்சியமாகும். எனவே இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் நாமும் இணைந்து அதிகப்படியான பெண்களை இக்கொடிய நோய் தாக்காமல் காக்க உதவலாமே!
இந்த நிகழ்வின் பிரின்ட் மற்றும் டிஜிட்டல் மீடியா தமிழ் பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்துள்ளது.