Published : 20 Jul 2021 10:40 AM
Last Updated : 20 Jul 2021 10:40 AM

‘இந்து தமிழ் திசை’, ஜெம் ஹாஸ்பிடல் இணைந்து வழங்கும் ‘நலமாய் வாழ...’ ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை.
தொடக்க நிலையிலேயே புற்றுநோயின் அறிகுறியைக் கண்டறிந்தால், அறுவை சிகிச்சையின்றி புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய ‘நலமாய் வாழ...’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஜெம் ஹாஸ்பிடல் உடன் இணைந்து ‘நலமாய் வாழ...’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று நடத்தின. ‘புற்றுநோய் சிகிச்சை – அன்றும் இன்றும்...’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். அவர்கள் பேசியதாவது:

கோவை ஜெம் ஹாஸ்பிடலின் சேர்மன் டாக்டர் சி.பழனிவேலு: புற்றுநோய் என்றாலே அதுவொரு உயிர்க்கொல்லி நோய், அதிலிருந்து மீள்வது கஷ்டம் என்றே பலரும் எண்ணுகிறார்கள். புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். புற்றுநோயும் சாதாரண ஒரு நோய் போல்தான். அதை வராமல் தடுக்கலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தலாம். நான் மதுரையில் மாஸ்டர் சர்ஜரி படிக்கையில் நிறைய பேர் கல்லீரல், கணையம், உணவுக்குழாய் புற்றுநோயோடு வருவார்கள். சிலருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படும். அவர்களும்கூட சில மாதங்களில் மீண்டும் புற்றுநோயால் அவதிப்படுவார்கள். அப்போதுதான் நான் புற்றுநோய் மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சையளிக்க வேண்டுமென்கிற உறுதியில் அதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்தேன்.
உலகிலேயே அதிக மக்கள் இறப்பதற்கான காரணங்களில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளது. புற்றுநோய்க்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. பல மாதங்கள், வருடங்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தெரியும். அறிகுறிகள் தெரியவில்லையென்றாலும் தொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சையை பெற்றால் முழுமையாக குணப்படுத்திவிடலாம். சில பெற்றோருக்கு புற்றுநோய் இருந்தால் அது அவர்களது குழந்தைகளுக்கும் வரக்கூடும். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக நவீன மருத்துவ லேபராஸ்கோப் சிகிச்சையை 1991-இல் பித்தப்பை புற்றுநோய் சிகிச்சைக்கும், 1993-இல் மலக்குடல் புற்றுநோய்க்கும் பயன்படுத்தினோம். அதைத் தொடர்ந்து 2000-த்திற்குள் வயிற்றில் உண்டாகும் அனைத்துப் புற்றுநோய்களுக்கும் லேபராஸ்கோப் சிகிச்சையைப் பயன்படுத்தும் நிலை உருவாகிவிட்டது. அதுவே சிறந்த மருத்துவ சிகிச்சை முறையாக இன்றளவும் இருக்கிறது. புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்திவிடலாம்.

குடல்புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.செந்தில்நாதன்: புற்றுநோய் என்றதுமே ஒரு எதிர்மறையான எண்ணம் பலரிடமும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலிலும் மக்களுக்கு புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறாமல் முற்றிய நிலையில் வரும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது என்பது சவாலாக உள்ளது. இந்தியாவில் 9 பேர்களில் ஒருவருக்கு புற்றுநோயின் தாக்கம் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இருப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோயின் தாக்கமும், ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு மலக்குடல் வாய் புற்றுநோயின் தாக்கமும் அதிகம். ஆனால், இந்தியாவில் அனைத்து வகை புற்றுநோய்களின் தாக்கமும் இருக்கிறது.
புற்றுநோய்க்கான சிகிச்சை முறை அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு மாற்றங்களோடு முன்னேறி வருகிறது. இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை முறையினால் என்டோஸ்கோபி மூலமாக உடனுக்குடன் புற்றுநோயின் தாக்கத்தை கண்டறிய முடிகிறது. புற்றுநோய் வந்தால் கவலைப்பட வேண்டாம். பெரிய அறுவை சிகிச்சையேதும் இல்லாமலேயே புற்றுநோய் கட்டியை வேரோடு எடுக்கும் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகள் இன்றைக்கு உள்ளன. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், புற்றுநோயிலிருந்து மீண்டு, இரண்டாவது வாழ்க்கை வாழ தயாராகலாம்.

ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கு.சிவராமன்: ஐரோப்பாவிலும் வளர்ந்த நாடுகளிலும் முதல் நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து குணப்படுத்தி விடுகிறார்கள். நம் நாட்டில் இன்னும் அப்படியான முறை வளரவில்லை. இப்படியான நிகழ்ச்சிகள் மூலமாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் பரவலாக கொண்டு சேர்க்க உதவும். புற்றுநோய் வந்தபிறகு அதைச் சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகள் இன்று பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. அதிக இரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும் உடையவர்களுக்கு அடுத்தபடிக்கட்டாக புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன.
இராசாயன பொருட்கள் அதிகமாக கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வது, புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய காரணங்கள் புற்றுநோய் வருவதற்கான காரணிகளாகின்றன. வெள்ளைச் சர்க்கரை எனப்படும் ஜீனியை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் மட்டுமின்றி, புற்றுநோயும் வரக்கூடும். நம் உணவில் இயன்றவரை சிறுதானியங்களைப் பயன்படுத்த வேண்டும். கவர்ச்சியான, ருசியான உணவுகள் எப்போதுமே நம் உடலுக்கு தீங்கு செய்பவை. நம் வீட்டில் சமைத்த உணவையே அதிகம் உட்கொள்ள வேண்டும். தேவையற்ற அச்சங்களை விலக்கி, முறையான சிகிச்சை பெற்றால் புற்றுநோயை நாம் வெற்றி கொள்ளலாம்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வை தவறவிட்டவர்கள் https://bit.ly/3iojlJr என்ற லிங்கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x